புன்செய் புளியம்பட்டி அருள்மிகு அன்னை காமாட்சி அம்மன் கோவிலில் கேதார கெளரி பூஜையை முன்னிட்டு அன்னை காமாட்சியம்மனுக்கு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
புன்செய் புளியம்பட்டி சேரன் வீதியில் அமைந்துள்ளது அன்னை காமாட்சி அம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் கேதார கெளரி பூஜை நடைபெறுவது வழக்கம். சிவபெருமானிடம் கோபித்துக்கொண்டு பார்வதிதேவி பூமிக்கு வந்து பின்பு புத்தரின் அறிவுரையை ஏற்று 21 நாட்கள் கடும்விரதம் இருந்து சிவபெருமானிடம் சேர்ந்தார். இதுதான் கேதார பூஜை என்றழைக்கப்படுகிறது. அதை தொடர்ந்து சிவபெருமான் பார்வதிக்கு தனது இடப்பாகத்தை அளித்து அரித்தநாரீஸ்வரர் ஆனது வரலாறு.
புன்செய் புளியம்பட்டி காமாட்சியம்மமன் கோவிலில் 15ஆவது ஆண்டாக கேதார கெளரி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பர நாதர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதுகுறித்து கேதார பூஜை குழுவை சேர்ந்த சாந்தி, பிரமிளா ஆகியோர் கூறியதாவது, கேதார பூஜை என்பது கடந்த விஜயதசமி துவங்கி தீபாவளி அமாவாசை தினம் வரை பெண்கள் 21 நாட்கள் கடும்விரதம் மேற்கொண்டு தனது கணவர், குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக செய்வது. இப்பூஜையால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மேலும் கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ள கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். கணவன் - மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். அன்னை காமாட்சியம்மன் கோவிலில் தொடர்ந்து 15 ஆவது ஆண்டாக கேதார கெளரி பூஜை நடைபெறுகிறது. அனைத்து பெண்களுக்கும் நோன்பு கயிறு, மஞ்சள் குங்குமம், வளையல் உள்பட 21 விதமான பிரசாதங்கள் வழங்கப்பட்டன என்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.